Monday, April 28, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-04-14 முதல் 26-04-14வரை)

ஆப்பிளின் சிரி(siri), கூகுளின் கூகுள் நவ்(Google Now) போன்ற பேச்சை கேட்டு இயங்கும் செயலிகளைத் தொடர்ந்து தற்போது வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் அலைபேசிகளுக்காக கோர்டானா(Cortana) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




டெக் மஹிந்திரா நிறுவனம் பெருந்தகவல்(Big Data) துவக்க நிறுவனமான(Start-up) ஃபிக்ஸ்டீரிம் நெட்வொர்க்ஸ்(FixStream Networks) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஃஎச்டிசி(HTC) சென்னையில் அமைந்திருக்கும் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கவிருப்பதாகத் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் கேப்ட்சா(CAPTCHA) [ ஒரு இணையதளத்தில் பயனர் கணக்கை உருவாக்கும் போதோ அதுபோன்ற மற்ற இடங்களிலோ மனிதர்களையும், கணினி பாட்(Bot)களையும் வித்தியாசப்படுத்தி Bot-களிலின் தாக்குதலில் இருந்து இணையதளத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு நுட்பம்]  புதிர்களை விடுவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் இது 99% துல்லியத்தன்மை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோட்டரோலாவின் இந்தியக் கிளைக்கு அமித் போனியை தலைவராக அறிவித்துள்ளது மோட்டரோலா நிறுவனம்.

மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் அமெரிக்காவைச் சேர்ந்த காணொளி/நிகழ்பட(video) நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் உலகின் முதல் 10 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவை தரும் நிறுவனங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது.

வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் 8 இயங்குதளத்திற்கு அதன் XP இயங்குதளத்தின் start menu போன்ற ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனாவை சேர்ந்த நுண்ணறிபேசி நிறுவனம் க்ஸியோமி(Xiaomi) என்கிற தனது அலைபேசியை இவ்வாண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் டிராய்(TRAI - Telecom Regulatory Authority of India) அலைபேசிகளில் இணைய இணைப்பின் குறைந்தபட்ச வேகத்தின் அளவை நிர்ணயிக்கவுள்ளது.  இது நிர்ணயிக்கப்பட்டபின் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரங்களில் ஒரு வேகத்தையும் உண்மையில் ஒரு வேகத்தையும் தந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது.

ஐபிஎம் நிறுவனம் 50 மடங்கு வேகமான வழங்கி கணினிகளை உருவாக்கியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் வகையிலான மகிழ்வுந்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Form-16-ம் பள்ளி நண்பனும்..

பல வருடங் கழித்து பள்ளி நண்பன்  ஒருவனை வங்கியொன்றில் சந்தித்தேன்.  கையில் Form-16-ன் நகலொன்றோடு நின்றிருந்தான்.  வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது தொடர்பாக விசாரிக்க வந்திருப்பதாக சொன்னவனிடம்,  "என்னடா Form-16-ல் Gross income-ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.  அதுவா, என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவன், ஒரு நொடி நிறுத்தி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "அது ஒரு கணக்கு உனக்குப் புரியாது..." என்றான்.  (ஐன்ஸ்டீன், "ஒரு விஷயத்தை உன்னால் மிக எளிமையாக மற்றோர்க்கு பரியும் வகையில் சொல்ல முடியவில்லையென்றால், உனக்கு அந்த விஷயம் சரியாக தெரியவில்லை என்று பொருள்" என்பார்)

எனக்கு சுர்ர்ரென்றது, உடனே அவனுக்கு வருமான வரி குறித்தான எல்லா விஷயங்கைளையும், கணக்கிடும் விதங்களையும் விளக்கி, இதெல்லாம் எனக்குப் புரியாதுதான் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றிருந்தது.  ஆனால், என் வழமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன்.  ஒரு மூன்றாம் மனிதன்தான் அவனுக்கு தெரியாத மற்றொரு 3-ம் மனிதனை உருவம் பார்த்து எடைபோடுகிறான் என்றால், உருண்டு புரண்டு ஒன்றாய் அடி வாங்கி கள்ளமின்றி விளையாண்ட 2 நண்பர்களும் கூட நீண்டதொரு இடைவெளியில் பிரிதொரு நாளில் சந்திக்கையில் அடுத்தவனின் உடை, உருவம் பார்த்தேதான் எடை போடுவார்களா...? (நமக்கும் டிரஸ்சிங் சென்ஸ்க்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும்...)

ஆடம்பரமில்லா, மிக எளிமையான காந்தியும், காமராசரும் கூட இவர்களுக்கு அற்பங்கள் தாம்.  10 சுமோ, 15 xylo-வோடு, 400-600 கிராம் தங்க நகைகளோடு வரும் மனிதர்கள்தாம் இவர்களுக்குப் மாமனிதர்கள். 

கொஞ்சமாகிலும் படித்த, வருமான வரியென்றால் என்ன என்று கொஞ்சமேயறிந்த எனக்கே (என்ன பெரிய எனக்கே..?) இந்த வகையான பதில்தான் கிடைக்கிறதென்றால், நான் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் படித்து, 10-வதோடு, 12 வதோடோ படிப்பை நிறுத்திவிட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்கும் ராஜ்குமாரையோ, ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அருணையோ, பெட்டிகடை நடத்தும் சரவணனையோ என்ன மாதிரி இவர்கள் நடத்துவார்கள்?

Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.

Tuesday, April 22, 2014

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை

முகநூல் நிறுவனம் ஹேக் (Hack) என்கிற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர், தனது இசைக்கான செயலியை நிறுத்தவுள்ளது.

ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டின் செல்வாக்கு குறைந்து அதன்பிறகு கேன்டி கிரஷ்-ன் சகாப்தம் ஆரம்பித்தது.  தற்போது இவ்விரண்டையும் தாண்டி ஃபிளேப்பி பேர்ட்-ம் 2048 என்கிற எண் விளையாட்டும் மிக வேகமாக தனது பயனர் அளவினை சேர்த்துவருகின்றன.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி 5 வகை நுண்ணறிபேசிகளை மார்ச் 27 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது சிஸ்கோ நிறுவனமும் மேகக் கணிமையில் களமிறங்கவுள்ளதாக அறியப்படுகிறது.


அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(28-04-13 முதல் 04-05-13வரை)

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்புக்கின் ஃபேஸ்புக் ஹோம்(Facebook Home) ஆண்ட்ராய்டு ஆப்(App) வெளியிடப்பட்ட 3 மூன்று வாரங்களில் பயனர்களிடமிருந்து எதிர்மறையான பின்னூட்டங்களையேப் பெற்றுள்ளது.  கூகிளின் பிளே ஸ்டோரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இதற்கு 1 நட்சத்திர (மொத்தம் 5 நட்சத்திரம், அதாவது 1/5 மதிப்பீடு) மதிப்பையே வழங்கியுள்ளனர்.

வாட்ஸ்ஆப் போன்ற நுண்ணறிபேசி குறுந்தகவல் பரிமாற்றிகளால் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை வழமையான குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணிக்கையைவிடக் கூடியுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தனது கூகுள் நவ்(Google Now) எனும் பேச்சு சார்ந்த நுண்ணறி தேடல் மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்யும் ஆண்ட்ராய்டு அப்ளிகே ஷனை முன்னரே அறிமுகப்படுத்தியிறுந்தது.  தற்போது இதை ஆப்பிளின் ஐபோனுக்கும் இலவச ஆப்(App) ஆக தரவுள்ளது.  ஆப்பிளும் கூகுள் நவ் போல சீரி(Siri) என்ற பெயரில் பேச்சு சார்ந்த ஒரு தேடலை அறிமுகப்படுத்தியிருந்தது ஆனால் அது கூகுள் நவ் போல் சிறப்பானதாக இல்லை.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1 மேசைக் கரண்டி தண்ணீர் மூலம் மொபைல், கேமரா போன்ற மின் சாதனங்களுக்கு மின்னேற்றம் அளிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.  பவர்டெரெக்(PowerTrek) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம் 3 வாட் வரை மின்சாரம் தரமுடியும் எனக் கூறப்பட்டள்ளது.

இந்திய நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ்(Micromax) தனது முதல் முப்பரிமாண(3D display) திரையுடன் கூடிய நுண்ணறிபேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  கேன்வாஸ் 3D(Canvas 3D) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணறிபேசியின் முப்பரிமாண அனுபவத்தைப் பெற தனியா கண்ணாடி எதுவம் தேவையில்லை.  இதன் விலை இந்திய ரூபாய் 9,999 ஆக இருக்கும் போலத் தெரிகிறது.



மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை 26-01-2014 லிருந்து 01-02-2014 வரை

டிவிட்டர் போல முகநூலும் நடப்பு நிகழ்வுப் போக்குகளை(Current Trends) இந்தியாவில் தரவுள்ளது

கொந்தர் ஒருவர் ஸ்னாப் சாட் அலைபேசி செயலியின் புதிய பாதுகாப்பு அம்சத்தை 30 நிமிடங்களில் உடைத்துள்ளார்

ரெட்ஹாட் நிறுவனம் மேகக்கணிமைக்காக பல தயாரிப்புகளை தரவுள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனம் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது.  அதன் பணியாட்களின் எண்ணிக்கையை விரைவில் 1 லட்சம் என்கிற அளவில் உயர்த்தவுள்ளதாக அறியப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம் அதன் தலைநகரான பெங்களூருவில் பொதுமக்களுக்கு இலவச வை-பை(Wi-Fi) இணைய இணைப்பைத் தரவுள்ளது.  இது முதலில் எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு, யஷ்வந்த்பூர், சாந்தி நகர் போன்ற இடங்களுக்கும் பிறகு மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் போல தெரிகிறது.

விக்கிப்பீடியா தனது புதிய முயற்சியாக முக்கிய மனிதர்களைப் பற்றிய அதன் பக்கங்களில் அவர்கள் பேச்சை இணைக்கவுள்ளது.  இதற்கு பிபிசி நிறுவனமும் தனது ஆவணக்கிடங்கில் இருக்கும் ஒலிக்கோப்புகளை கொடுத்து உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

தேடல் நிறுவனமான கூகுள் தனது உலாவி அடிப்படையில் அமைந்த இயங்குதளமான குரோம் ஓஎஸ்(Chrome OS) கொந்தர்களைக் கொண்டு பாதுகாப்பு சோதனை(Hack) செய்யவுள்ளது.  இதற்கு பரிசாக 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசாகவும் அறிவித்துள்ளது.  இந்நிகழ்வு வரும் மார்ச் மாதம் Pwnium என்கிற பெயரில் நடைபெறவுள்ளது.

யாஹூ நிறுவனம் உலாவியை அடிப்பைடயாகக் கொண்டு விளையாட்டுகளை உருவாக்கி வரும் தொடக்க கால நிறுவனமான கிளவுட்பார்ட்டி(Cloud Party) என்கிற நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஸ்கைடிரைவ்(SkyDrive) மேகக் கணிமைச் சார்ந்த நினைவக சேவையின் பெயரை ஒன்டிரைவ்(OneDrive) என்று மாற்றவுள்ளது.

கூகுள் நிறுவனம் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு சாரந்த தொடக்ககால நிறுவனமான டீப்மைண்ட்(DeepMind) என்கிற நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

நோக்கியாவும் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மலிவுவிலை அலைபேசியை நோக்கியா நார்மாண்டி (அ) நோக்கியா எக்ஸ் என்கிற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தென்கொரிய கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை 5ஜி வலையமைப்பை உருவாக்க முதலீடாக தரவுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த 5G தொழில்நுட்பமானது 4G தொழில்நுட்பத்தைவிட 1000 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.  இத்தொழில்நுட்பம் மட்டும் சாத்தியாமானால் ஒரு அதி தெளிவான திரைப்படங்களை(HD movie) உங்கள் அலைபேசியிலிருந்து சில நொடிகளில் தரவிறக்கலாம்.

இன்டெக்ஸ் நிறுவனம் 12,500 ருபாய் விலையில் வளைவான திரையுடைய நுண்ணறி அலைபேசியை வெளியிடவுள்ளது.  இது அதன் அக்வா(Aqua) வரிசையில் வரும் ஒரு அலைபேசியாகும்.

டிவிட்டர் தனது ஆன்ட்ராய்டுக்கான செயலியை மேலும் மேம்படுத்தியுள்ளது.  இப்போது இந்த மேம்பாடுகளின் மூலம் நீங்கள் பகிரும் புகைப்படங்களை திருப்புதல்(Rotate) மற்றும் வெட்டுதல்(Crop) போன்ற செயல்களையும் செய்ய முடியும்.

ஆப்பிள் சூரிய ஒளியில் மின்னேற்றம் அடையும், இரண்டு பக்கமும் திரையையுடைய ஒரு கணினி/தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது.

2013 உற்பத்தி/விற்பனை செய்யப்பட்ட 3 அலைபேசிகளில் ஒன்று சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்று கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இணைதளத்தின் ஈற்றுப் பெயர்களான டொமைன்கள்(Domains)  பெயரில் புதிதாக .guru, .bike போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டில் மொத்த நுண்ணறி அலைபேசிகளின் விழுக்காட்டில் 79% ஆன்ட்ராய்டினுடையது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன்.

டிவிட்டர் ஐபிஎம் நிறுவனத்துடன் 900 காப்புரிமைகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

சிஸ்கோ பொருட்களின் இணையத்தை(Internet of Things) மேகக்கணிமை தரவுதளங்களுடன் இசைவாக இணைக்கும் ஒரு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து பணியாற்றிவருகிறது.  இதற்கு பனிமூட்ட கணிமை(fog computing - தமிழாக்கம் சரியா?) என்று பெயரிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தான் கையகப்படுத்திய மோட்டோரோலா நிறுவனத்தை லெனோவா நிறுவனத்திடன் விற்றுள்ளது.

ஆஸ்பைரிங் மைண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வரிக்கையின் படி புதுடெல்லி, பீகார் போன்ற மாநிலங்கள் திறமையான தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை உருவாக்குவதாகவும், தமிழ்நாடு மற்றம் ஆந்திரப்பிரதேச மாநிங்களின் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர்களாகவும் இருப்பதாக கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மேகக்கணிமை சேவையான அஷூரை(Azure) மேம்படுத்த/விரிவுபடுத்த பெங்களூருவைச் சார்ந்த சிலௌடுமன்ச்(CloudMunch) என்ற தொடக்ககால நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் நுண்ணறிபேசிகளுக்கான ஒரு கட்டுரைகளைப் படிக்கும் செயலியை வெளியிட்டுள்ளது.  பேப்பர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி சமூக தளங்களிலிருந்து செய்திகளை சேகரித்து தொகுத்து வழங்கும் என்று கூறியுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் மைய்ன்டாரா நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Wednesday, April 9, 2014

மாற்றுக் கருத்து

குறிப்பு: இந்தக் கட்டுரை 2005-ம் ஆண்டு நான் கல்லூரியில் இளநிலை படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது.  எழுதிய தகவல்கள் அன்றைய தேதியில் சரியானவைதான்(!?) இன்று பழைய தகவல்கள் ஆகிவிட்டன(:p).  தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு சில இணைய இணைப்புகள் மற்றும் படங்களை தற்போது சேர்த்துள்ளேன்.  படித்துவிட்டு உங்கள் வாழ்த்துகள், வசவுகள், மாற்றுக் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.   சரி வாங்க கட்டுரைக்கு போலாம்....


  மனிதன் ஆப்பிளை உண்ட காலத்திலிருந்தே நன்மை தீமை அனுபவித்து யோசிக்க, சிந்திக்க கற்றுக்கொண்டான்.  மொழி உண்டானபின் பேசிப் பழகவும், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் அறிந்தான்.  விஷயஞானம் அதிகரித்து முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தான். மனிதனின் நிலை உயர உயர அவனிடம் கருத்தை கேட்க ஆரம்பித்தனர் மற்றவர்கள்;  சான்றோரும் நற்கருத்துகளையே தந்தனர்.  காலத்தின் சக்கரம் சுழலும் வேகம் அதிகரித்தது.  ஒரு சிலர் மட்டுமே நல்லறிவைப் பெறமுடியும் என்ற நிலைமாறி விரும்பும் அத்தனைபேரும் நற்கருத்துகளையும், நல்லறிவையும் பெற முடிந்தது.  எல்லோரும் அறிவைப் பெற்றாலும் ஒவ்வோருவனும் தனிமனிதன் தானே,, அவனவனுக்கு எது ஒன்றைப் பற்றியும் ஒரு பார்வையும் கருத்தும் இருக்கும்தானே.  ஆற்று மீன்கள் அத்தனைக்கும் நீந்தத் தெரியும், ஆனாலும் ஒவ்வொன்றும் அதன் பாதையில் தனி வழியில் தானே நீந்துகிறது.

  அரசாட்சி நடந்த காலத்தில் மன்னரே உயரிய தலைவன் அவன் கருத்துக்கு மாற்றில்லை.  அவன் கொடுமையே புரிந்தாலும் அது தான் சிறப்பு என்றிருந்தனர்.  பலரும் கல்வி சானம் பெற்றதாலும் நன்மை தீமை புரிய ஆரம்பித்ததானாலும் அரசன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து ஒவ்வாததை எதிர்த்து அதற்கு எதிரான கருத்துகள் சொல்லப்பட்டது.  உலகின் அத்தனைப் புரட்சிக்கும் கருத்து வேறுபாடு மட்டுமே வித்திட்டத்து.  குடிமக்கள் உணவின்றி தவித்திருக்கையில் வரியை உயர்த்தி செலுத்ததவேண்டும் என்று மன்னன் கூறுவானேயானால் கருத்து மாறுபட்டு புரட்சி வெடிக்கும்.  மன்னராட்சியில் இஷ்டத்துக்கு கருத்துகூற முடியாது.  அப்புறம் பேச, பார்க்க, நுகர கழுத்துக்கு மேல் ஒன்றும் இருக்காது.

  மன்னராட்சி அழிந்து மக்களாட்சி மலர்ந்ததும் சுதந்திர உரிமையில் பேச்சுரிமை முதன்மை பெற்றது(கருத்து கூறவா!). நமக்கு சிறிதளவு புகழ் சமூகத்தில் இருக்குமென்றால் கருத்துகூற அந்த தகுதிபோதும்(!).  நமக்கு தெரியாத துறையில் ஏதேனும்  நிகழ்ந்தால் கூட நமக்கு அதைப்பற்றி தெரியாவிட்டாலும் கூட, நாமே கருத்துகூற விரும்பாவிட்டாலும் கூட நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஆரம்பித்து உசுப்பேற்றி அவனுக்கு தலைக்கனம் உண்டாக்கி பேசவைத்து அவன் முதுகை ரணகளமாக்கி இரவுத் தூக்கத்தை பாழ்படுத்திவிடுவர்.  சிலை வடிக்கும் சிற்பியிடம் பக்கத்து நாடு அணுகுண்டு வெடித்ததைப்பற்றியும், எழுத்தாளனிடம் வயல்வெளியில் பயிர்களில் திடீர் மருந்துகள் அடிப்பதைப்பற்றியும் கருத்துகேட்டால் என்னாகும்! பட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

  ஒரே துறையில் இருப்பவர்களிடம் மாற்றுக்கருத்து இருக்கவேண்டும்.  இல்லாவிடில் அந்தத்துறை வளராது.  சான்றோர்கள் சான்றோராயிருக்கக் காரணம் தன் கருத்துக்கு பிறர் மறுப்புகூறினால், பதில் கருத்து கூறினாலும் அதில் உண்மையிருப்பின் அதை ஒப்புக்கொளவர்.  ஆனாலும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருப்பவர்கள் தவறான கருத்துகளை சொல்லக்கூடாது.  இல்லாவிட்டால் மௌனிப்பது நல்லது.


Justus Sustermans - Portrait of Galileo Galilei, 1636
கலீலியோ கலீலி
  இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனுடைய கருத்துக்கும் எதிரான கருத்துடையவன் மிக குறைந்த அளவாய் ஒருவனாயும், மிக அதிக அளவாய் அவனைத்தவிர்த்த எல்லோருமாகவும் கூட இருக்கலாம்.  "உலகம் உருண்டை" என்ற கலிலியோவின் கருத்துக்கு அவரைத்தவிர அத்தனைபேரும் எதிராய்தானே இருந்தனர்.  இன்றும் கூட "உலகம் தட்டை"* எனக்கூறுவோர் சங்கம் அமைத்து உறுப்பினர்களாய் உள்ளனர்.  ஒருக்கால் நம் கருத்துக்கு எதிர்கருத்து மாறானதாய் உண்மைக்கு ஏற்பில்லாததாய் இருப்பினும் அதை 'இது என் கருத்து, அது உ(ன்)ங்கள் கருத்து' அவ்வளவே என ஏற்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வரவேண்டும்.  இதை எட்டும் நாளில் ஒவ்வோருவரும் அறிவிற் சிறந்த சான்றோனாய், சகிப்புத்தன்மை உடையவனாய் மாறலாம்.




Lakshmimittal22082006
லட்சுமி மிட்டல்
By Ricardo Stuckert/PR (Agência Brasil [1])
[CC-BY-3.0-br], via Wikimedia Commons
  நம் கைவிரல்களையே எடுத்துக்கொள்வோம், ஒன்று கட்டையாய் குட்டையாய், ஒன்று சப்பையாய் குட்டையாய், ஒன்று நெட்டையாய் இருக்கிறது.  ஐந்துவிரலும் கட்டைவிரல் பொலவோ அல்லது நடுவிரல் போல நீண்டு இருப்பின் எப்படியிருக்கும் யோசித்துப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது இல்லையா?.  கருத்து மாறுபாடுகள் அனைத்தும் வளர்ச்சிக்கு அடியுரங்கள்.  உலகின் இரும்புமனிதர் லட்சுமி மிட்டல் ஒருமுறை ஒரு நாட்டில் மிக நஷ்டத்தில் மூலப்பொருட்கள் கூட கிடைப்பதற்கு சிரமாயுள்ள ஒரு இரும்பு ஆலையை வாங்க முடிவுசெய்தார்.   உலகின் அத்தனை தொழிலதிபர்களும், தொழில்நுட்பவாதிகளும் இரும்பிலே ஊறியவர்களும் (எப்படி?)   அந்த தொழிற்சாலையைப் பார்த்து விட்டு இதை வாங்குவதும் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதும் ஒன்று என்றனர்.  ஆனால், அதற்கு நேர்மாறான கருத்தோடிருந்த மிட்டல் அந்த தொழிற்சாலையை வாங்கி ஒராண்டு காலத்திற்குள்ளேயே இதை லாபமீட்டும் ஒருதொழிற்சாலையாக மாற்றினார்.  'கருத்து வேறுபடும்போது நம் கருத்தில் வெற்றிபெற வேண்டும் என்கிற உத்வேகம் தோன்றி ஒன்றுக்கு நான்காய் அதற்காக உழைப்போம், சிந்திப்போம், செயல்படுவோம்.  இவை அனைத்தும் வளர்ச்சிக்குண்டான குணங்களாயிற்றே...


  நம் நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதீபதியாக இருந்து ஒய்வுபெற்ற ஆர். சி. லகோதி அவர்கள் தூக்கு தண்டனை இருக்கவேண்டாம் என்கிறார்.  புதிய தலைமை நீதிபதி ஒய். கே. சபர்வால் வேண்டும் என்கிறார்.  இருவரும் அடித்துக்கொள்ளவில்லையே.   அது உங்கள் கருத்து, இது என் கருத்து என ஏற்றுக் கொள்கின்றனரே.  அதனால் தான் அவர்கள் சான்றோர், அந்த மனப்பாங்கே அவர்கள் இந்த நிலைக்கு உயரக்காரணம்.

மாற்றுக்கருத்தைக் கொண்டிருப்பினும் அதில் பிடிமானமாக இருப்பவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டுகிறார்கள் அதாவது வெல்கிறார்கள்.  தனது ஆசிரியர் சொல்லியும் அதை நம்பாத நீல்ஸ்போர்(Niels Bohr)-ம் , பௌலி(Wolfgang Pauli)-ம் அணு இப்படி இருக்கும் என கூறி அவர்களுடைய ஆசிரியரின் கருத்தினின்று மாறுபட்டு (அதாவது இதுவரை எலக்ட்ரானையோ அணுவின் மற்ற பொருள்களையோ, எலக்ட்ரானின் சுழற்சியையோ யாரும் கண்டதில்லை (நான் அறிந்தவரையில்) ஆகவே அவை அனைத்தும் கருத்துகள்தான்)  அதை நிருபித்து அதற்காக நோபல் பரிசும் பெற்றார்களே..  இந்த வளர்ச்சி கருத்து மாறுபாட்டினால் தானே கிடைத்தது.  ஆகவே, ஒரு துறையில் இருப்பவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு/மாறுபாடு வரவேற்கத்தக்கது.  (அது கைகலப்பாகாத வரையிலும்  வீம்புக்கு இல்லாதவரையிலும் :) )

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" அல்லவா.  நம் நீதிபதிகளின் கருத்தைப் பற்றிக் கூறும்போது இது நினைவிற்கு வந்தது.  இது எப்போதோ, எதிலோ படித்தது.  வெளிநாடு ஒன்றில் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நாளேடுகளில் செய்தி வந்திருந்தது.  அந்த செய்தி,  "தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைவரும் வயோதிக, மறதிநிறைந்த முட்டாள்கள்" என இருந்தது.  இது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கையில்  அவர்கள்அளித்த பதில், "நாங்கள் வயோதிகர்கள் என்பது உண்மை, அதனால் எங்களுக்கு மறதியிருப்பதும் ஓரளவு உண்மை.  நாங்கள் முட்டாள்கள் என்பது அவர்களுடைய கருத்து".  இப்படி கூறும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு உண்டா என்றால் இல்லை என்பது தான் முடிவான பதிலாக அமையும். 

உலகில் அத்தனையும் இரண்டு நன்மை-தீமை, பகல்-இரவு, ஒளி-இருள்... இப்படி பல.. எனில் கருத்துமட்டும் ஒன்றாக இருக்கவேண்டுமா என்ன?  ஒரு நாணயத்திற்கே 2 பக்கங்கள் உண்டு எனில் கருத்துக்கு கண்டிப்பாக பல பக்கங்கள் இருக்கத்தான் செய்யும், அதை ஏற்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வோம்.  சகிப்புத்தன்மையோடு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளித்து முன்னேற்றத்திற்கு வித்திடுவோம்.  என்ன என் கருத்தை ஒத்துக்கொள்கிறீர்களா...? ;)


*  உலகம் தட்டை என நம்பும் சங்கம் குறித்த மேலதிக தகவலுக்கு ஆங்கில விக்கி கட்டுரை
அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் The flat earth society .



Thursday, April 3, 2014

கவிதை

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
ஞானப்பழம்

ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்

புரியாதவனுக்குப்
புதிர்

புரிந்தவனுக்கும்
கைவராக் கலை

எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்

கவிஞனின்
பரம்பரைச் சொத்து

வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.

Wednesday, April 2, 2014

மேற்படிப்பும் தமிழும்


வாழ்வில் மேலும் மேலும் முன்னேற எல்லோரும் மேற்(படிப்பு) படிக்கின்றனர்.  பள்ளிவரை தமிழில் படித்தவர் கூட கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.  தமிழ்மீது தீராத காதல் கொண்டவர்கூட மேற்படிப்பில் நிர்பந்தத்தின் காரணமாக ஆங்கிலத்தில் படிக்க நேரிடுகிறத்து.  அந்தச் சமயத்தில் பணத்துக்காக தன் காதலியை கைகழுவிவிடுபவன் போல சற்றும் வெட்கமின்றி தன் தாய்மொழியாம் தமிழை கைவிட்டுவிடுன்றனர்.  அதற்கு காரணமாக நான் காலத்தோடு இயைந்து வாழ்கிறேன் என்று கதை வேறு.

சீனர்களும், ஜப்பானியர்களும் நம்மைவிட தொழில் நுட்பத்தில் மூத்தோர்களாய் இருக்கின்றனர் காரணம் ஒன்றே ஒன்றுதான் அவர்கள் அனைவரும் எந்தப் பாடமாயிருப்பினும், தொழில்நுட்பமாயிருப்பினும் தம் தாய்மொழியிலேயே கற்கின்றனர்.  ஒரு கருத்தில் நான் மிக உறுதியாய் இருக்கின்றேன், எந்தவொரு மனிதனும் வேறந்த மொழியைவிடவும் தன் தாய் மொழியில் எந்தவொருவிஷயத்தையும் தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்துகொள்ளலாம்.  அதனால்தான் ஜப்பான் தொழில்நுட்பத்ததில் அமெரிக்காவிற்கே சவால் விடுகிறது.  மூளைவளம் உள்ள இந்தியா அடிமைபோல் அதற்கு சேவகம் செய்கிறது.

ஒரு தமிழன் ஜப்பானுக்கு வேலைக்குச் செல்ல ஜப்பானிய மொழியையும், சீனத்ததிற்கு செல்ல சீனமொழியையும் கற்கிறான்.  தமிழ்நாட்டில் வேலைசெய்ய ஆங்கிலம் கற்கும் அவலம் நம் தமிழ்நாட்டில் தவிர (இந்தியா) வேறெங்கும் நடக்காது.  கேட்டால் இங்கு எனக்கு வேலையில்லை,  நான் என் வாழ்வை வளமாக்க மேலைநாட்டுக்கு செல்கிறேன் என பதில் வருகிறது.    ஏன் வேலை தேடுகிறாய் உருவாக்கு.  அமெரிக்க NASA-ல் 35% மேல் இந்தியர்கள் உள்ளனர்.  அமெரிக்க Microsoft -ல் 40% மேல் இந்தியர்கள்.  பில்கேட்ஸே தன் திருவாய் மலர்ந்து தனது கம்பெனியில் வேலைபுரியும் இந்தியரனைவரையும் அமெரிக்க அரசு வெளியேற்றினால் நான் எனது கம்பெனியையே இந்தியாவுக்கு மாற்றிவிடுவேன் என்கிறார். 

ஜப்பானில் வேலை பார்க்க ஜப்பானிஸ் கற்கும் தமிழன் தன் தாய்மொழி தமிழை வெறுத்து ஏதோ பேசத் தகாத வார்த்தைபோல் கூனுகிறான்.  இது தன் வீட்டில் சுடச்சுட உணவிருக்கையில் பழைய  எச்சில் சோற்றுக்கு கையேந்தும் நிலைக்கு ஒப்பாகும்.  247 எழுத்துக்கொண்ட உலகில் தொன்மையான, இயற்கையோடு இயைந்து உருவான தமிழை கற்க வெறுத்து 1000-த்திற்கும் மேற்பட்ட எழுத்துகொண்ட சீன, ஜப்பானிய மொழியைப் பேசத்துணிகிறான் தமிழன்.  தாய்மொழியில் பேசினால் தண்டனைதரும் அவலங்கள் நடந்தேரும் பள்ளிக்கோயில்கள் பலநிறைந்த புண்ணிபூமி தமிழகம், ஆள்வோரும் அதை ஆதரித்தது வளர்க்கும் அற்புதம் நிறைந்த பெரும் பேரருள் நிறைந்த புண்ணிய பூமி தமிழகம்.  தொன்மையும், இலக்கண, இலக்கிய வளமும் நிறைந்த இளமை குன்றாத மொழி தமிழ்.  பல ஆயிரக்கணக்கான மொழிகள் கால ஓட்டத்தில் முதலில் வரி வடிவமிழந்து, பின்னர் ஒலிவடிவிழந்து இறுதியில் வழக்கொழிந்து போய் விட்ட காலத்தில்,  தன்னின்று பல மொழிகளை உருவாக்கி தன் தனித்தன்மை சிறிதும் குன்றாமல் சிற்சில மாற்றங்களை ஏற்று "என்றும் பதினாறாய்" மொழியுலகின் மார்கண்டேயனாய் தமிழ்மட்டும் திகழ்கிறது.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்   -  பாரதிதாசன்

தமிழ் சாகாது, சொல்கிறவர்கள் சாவார்கள்   -   மு. மேத்தா


இரண்டில் எது நடக்கும்.....?   காலம் மட்டுமே பதிலை அறியும். 
(அங்களாய்ப்பில் மனம் வெதும்பி பாரதிதாசன் அப்படிக் கூறியிருப்பார்.  தமிழ் சாகின்ற ஒரு நிலை வருமென்றால் - அது உலகின் கடைசி மனிதன் சாக நேரும்போதுதான் நடக்கும்...)

குறிப்பு:
   இந்தக் கட்டுரையும் குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்.
உங்கள் வாழ்த்துகள், வசவுகள் ஏதாவது இருந்தால் இரண்டையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... ;)

Tuesday, April 1, 2014

கடந்த 50 ஆண்டுகளில் கணிணி, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

  இந்தியாவின் முதல் கணிப்பொறியின் பெயர் உரல்(Ural), ஆம் பெயரைப்போன்றே பெரிதான ஒன்று.  ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதே தற்போது முழுமையாக தகவல் தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்துள்ளது.  உலகத்தில் மாற்ற முடியாத ஒன்றான மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதுவழியில் பயணிப்பவர்களே மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும்.  இது தனி மனிதற்கு மட்டுமல்ல ஒரு முழு தேசத்திற்கும் பொருந்தும். 

உலக வரலாற்றில் மிகச்சிறந்த நூற்றாண்டாக ஒன்றிருக்குமானால் அது கணிணி கண்டறிப்பட்டட நூற்றாண்டுதான்.  வேறெந்த நுட்பமும் ஏதேனும் ஒருசில துறையில் மட்டுமே வளர்ச்சிக்கு வித்திடும்.  உதாரணமாக நீராவி எஞ்சின், அணுக்கரு வினைகள், ராக்கேட் இன்னும் பல.  ஆனால், தகவல் தொழில்நுட்பம் மட்டுமே எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட்டு ஒரு தேசத்தையே உயர்த்தும். 

19-ம் நூற்றாண்டுவரை மாட்டுவண்டியில் நகர்ந்து கொண்டிருந்த மனிதகுல வளர்ச்சி 20-ம் நூற்றாண்டில் இராக்கெட் பிடித்து ஒளிக்கு நிகரான வேகத்தில் முன்னேற ஆரம்பித்துவிட்டது.  தத்தித்தடுமாறி தவழ்ந்த மனிதகுலம் எஸ்கலேட்டரில் ஏறி ஓட ஆரம்பித்துவிட்டது. 

இன்று ஜப்பானும், கொரியாவும் விண்ணை முட்டி உயர்ந்து வருகின்றனவென்றால் காரணம் தொழில்நுட்பம் தானே.  அமெரிக்காவே அஞ்சுகிறான் என்றால் காரணம் அதுதானே.  50 வருடத்திற்கு முன்பு வளைகாப்பிற்கு சேதி அனுப்பினால் சேதி கிடைத்து வருவதற்குள் பிறந்த குழந்தைக்கு பல் முளைத்துவிடும்.  இன்றைய நிலைமை எப்படியிருக்கிறது?  அமெரிக்காவிலிருப்பவனுக்கு கூட அடுத்தநொடியே செய்தி அனுப்பிவிடலாம் காரணம்  e-mail.  "இங்க சேதி தட்டுனா அங்க தெரியும்...."

பக்கத்து மாநிலத்துக்கு பேசவேண்டுமென்றால் கூட Trunk call-ல் காத்திருக்க வேண்டும்.  இன்று பக்கத்து நாட்டிற்கு ஏன் பக்கத்து கண்டத்ததிற்கே பட்டென பேசிவிடலாம்.  அன்று ஊருக்கு ஒரு டெலிபோன், இன்று ஊரெல்லாம் செல்போன்; அன்று கல்யாணம், திருவிழா, சடங்குக்கு ஒரு அவசர தந்தி இன்று மாடியிலிருந்துகொண்டு கீழேயிருப்பவனுக்கு கீழேயிறங்கி வருவதற்குள் அனாவசிமாக ஒரு நூறு sms கள்.

"பிறந்த 5 மாதங்களில் ஒரு குழந்தை இரு கால்களில் மாராத்தான் ஓட்டம் ஓட முடியுமா? சாத்தியமேயில்லை!"  ஆனால், கணிணி துறையில் எதுவும் சாத்தியம் இல்லையா? அதனால்தான் கணிணி துறை, தான் பிறந்த 50 வருடகாலத்தில் இவ்வளவு வேகமாக மாராத்தான் ஓட்டத்தில் முன்னேறி வருகிறது.  ஒரு அறையே ஒரு முழு கணிபொறியாய் இருந்த காலம் மாறி இன்று அறைமுழுவதும் கணிணியாய் மாறியதோடு நில்லாமல் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல கனகச்சிதமாக Laptop வடிவம் பெற்றுவிட்டது.  vacuum tube-களில் அடைபட்டுக் கிடந்த கணிணி தன் தடைகளை தகர்த்து வெளிவரும் ஜல்லிக்கட்டு காளைபோல சீறிப்பாய்ந்து சிறிய சிலிக்கன் சிப்புகளில் உலகையே வலம்வந்து கொண்டிருக்கிறது.

ஒரு முழு அறையில் vacuum tube -களில் மூச்சுத்திணறிக்கொண்டும், பலவித வயர்களில் கை, கால் கட்டுண்டும் சிக்குண்டும் கிடந்த கணிணி இன்று Laptop ஆகி சுதந்திரகாற்றை உற்சாகமாய் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.  வந்த புதிதில் உடல் பெருத்த மூளை வளர்ச்சி மட்டும் குறைவாயிருந்த கணிணி (நினைவகத்தைக் குறிப்பிடுகிறேன்) மொத்த மெமரியே ஒரு சில MB களாய் இருந்தது மாறி இன்றோ 200, 300 GB கொண்ட கணிணிகள் கூட வந்துவிட்டன.  சவலைக் குழந்தையாயிருந்த கணிணி சரிவிகித உணவு உண்டு சவால் விடுகிறது.

மூட்டை மூட்டையாய் விதைநெல் மட்டும் இருந்தால் போதுமா? விதைத்து விளைவிக்க, செயல்படுத்த நிலம் வேண்டாமா?  RAM -ஐக் குறிப்பிடுகிறேன்.  16 MB  அளவிருந்த RAM-ன் அளவு வேகவேகமாய் வளர்ந்து பல GB அளவுக்கு வந்துவிட்டது.  அத்தனையும் கடந்த ஐம்பதே வருடங்களில்.  குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் என்பதை கதைகளில் கேட்டிருப்போமில்லையா நேரில் கணிணியாக பார்க்கலாம்.  தன்னை உருவாக்கிய மனிதனைவிட அனைத்திலும் முன்னேறிவிட்டது.  என்ன அருகிலிருக்கும் சக கணிணியைக் கண்டு கண்ணடிக்கவோ, கடலை போடவோ, sms அனுப்பவோ முடிவதில்லை.  காரணம் தானே சிந்திக்கவோ முடிவெடுக்கவோ தெரியாததுதான். அதையும் நிவர்த்தி செய்ய "Artificial Intelligence" அறிஞர்கள் முயன்றுவருகிறார்கள்.

பெரிய CRT-களில் சிக்குண்டு கிடந்த கணிப்பொளி diet மூலம் slim ஆகி அழகாகும் நடிகைபோல LCD-யாய், Plasma Display-வாய் பேப்பர் ரோஸ்ட் போல மாறிவருகிறத்து..  தொட்டுப்பேச Touch-panel ஐ போல வந்துவிட்டது. 

அறிவியல் கதை எழுதுபவர்களால் கூட கற்பனை செய்து வளர்ச்சியை கதையாய்  எழுதமுடியவில்லை.  எப்படி என்னவிதமாய் வளர்ச்சியில் விஸ்வரூபம் காணும் என கணிக்கமுடியவில்லை.  எப்பொழுதேனும் சிறு மாற்றத்தடையால் தடுக்கிவிழுந்தாலும் அதையே தன் வளர்ச்சிக்கு அடையாள மைல்கல்லாய் நாட்டி தன் பெருமையை நிலைநாட்டி முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறது கணிணி.  கணிணி துறைக்கு வரும் தடைக்கற்குவியல்கள் அனைத்ததும் பூக்குவியலாய் மாறி அதன் பாதையிலேயே பூமாரி பொழிகிறத்து. 

ஆறுகளனைத்தும் சங்கமிக்கும் கடல்போல கணிணி எல்லாதுறைகளும் சங்கமிக்கும் hub-ஆகி வருகிறது.  கணிக்கிடும் பொருட்டு ஒரு calculator ஆக பிரசவித்து இன்று பலசரக்கு கடையில் bill-போடுவதிலிருந்து இராக்கெட்டை ஏவும் தொழில்நுட்பம் முதல், அதை கண்காணிக்கும் வரை அனைத்ததையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து "மௌனக் கடவுளாய்" சிலைக்குப் பதில் சிலிக்கான் சில்லில் பூஜை புனஸ்கார நிவேத்தியத்திற்கு பதில், சங்கு, சக்கரம், கதை, வேல், வில்லிற்குப் பதில் CPU, RAM, ROM, Mouse கொண்டு உலகையே ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிந்து வருகிறத்து.  அலேக்சாண்டர் இன்றிருந்தால் உலகை வெல்லுவதற்குப் பதில் கணிணிக்கு copy right-ம், patent-ம் வாங்கதான் போராடுவாரென்று எண்ணுகிறேன்.

இன்று கணிணி இல்லாவிடில் உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் எனும் அளவுக்கு எல்லா துறைகளிலும் புகுந்து ஊடுருவி வளர்ச்சியடைந்துள்ளது.   'அவனின்றி அணுவும் அசையாது' என்ற நிலைமாறி 'கணிணியின்றி எதுவும் அசையாது' என்ற நிலைவந்துவிட்டது. 

இன்றும் கணிணி Information Technology, Artificial Intelligence, Nano technology என்று பலவித முகங்களோடு மென்மேலும் வளர்ந்துவருகிறது.  மண்ணைத்தோண்டும் geology முதல் விண்ணைத் தீண்டும் Astronomy வரை தாவரத்தை பற்றிய botany முதல் மனிதனை ஆராயும் microbiology, Biotechnology  வரை எல்லாதுறைகளிலும் தன் கரத்தை நீட்டி வளர்ந்து வருகிறது. 

எந்தவொரு வளர்ச்சியிலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும்.  தீமைகள் பலவும் இருக்கும் நாம் தீய முன்னுதாரணங்களைத் தவிர்த்து நல்ல முன்னுதாரணங்களை மட்டும் மனதில் கொண்டு நீர் கலந்த பாலில், பால்மட்டும் அருந்தும் அன்னமாய் இருப்போம்.  கணிணி அப்படி தீமைக்கு வித்திட்டடாலும் அதற்கு மனிதன்தான் காரமேயன்றி கணிணியோ தகவல் தொழில்நுட்பமோ காரணமில்லை.

உலகின் தலைசிறந்த ஒரு துறைக்கு நான் என்னளவில் எந்த பங்களிப்பும் தராவிட்டாலும் அந்தத்துறையைச சேர்ந்த ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தான்.  நம்மால் முடிந்தளவு கணிணித்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அவ்வளர்ச்சியை நேர்வழியில் நல்லமுறையில் பயன்படுத்தி நாட்டுக்கு வளம் சேர்த்து நமக்கும் பலம் சேர்த்தது நாம் பிறந்த இந்நாட்டுக்கு உலகளவில் நற்பெயர் பெற்றுத்தரவேண்டும் என வேண்டி

'நீயும் நானும் ஒண்ணு,
காந்தி பிறந்த மண்ணு'


என்கிற உலகை மாற்றிப்போட்ட கவிதை வரியோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

குறிப்பு:
   இந்தக் கட்டுரை குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்(சில காரணங்களுக்காக).  எனவே, மிகவும் பழைய தகவலோடு இருப்பதாகவோ அல்லது தகவல் பிழை இருப்பதாகவோ கருத வேண்டாம், கண்டிப்பாக இது பழசு தான்.