Monday, July 22, 2013

பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா..?


  பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா... கிராமத்துல(சில நகரங்கள்ளயும்) ஆடிமாசம் ஆயிட்டா எல்லா கோயில்கள்ளயும் (குறிப்பா திரௌபதி அம்மன் கோயில்கள்ல) ராத்திரி மக்கள் எல்லாரும் பாய்,தலைகாணி, தண்ணி குடம், சொம்பு, நொறுக்குத்தீனி எல்லாம் எடுத்துக்குட்டுப்போய் உக்காந்துப்பாங்க.  பாரதம் பாடறவங்க மகாபாரதக் கதைய பாட்டா ராகத்தோட ஆங்.. ஆமா.. அப்புடிலாம் சவுண்டு எபெக்ட்டோட விடிய விடிய பாடுவாங்க.  அப்பலாம் டிவி ஊர்லயே ஒருத்தர் 2 பேர் வீட்லதான் இருக்கும், மக்களுக்கு என்டர்டெயின்மென்ட்னா முக்கியமா இந்த பாரதம் கேக்கறதுதான்.  ஊரே திரண்டு போயிடும், ஒரு 10, 11 மணிக்கெல்லாம் பொடிசுக எல்லாம் தூக்கத்துல சாமியாட ஆரம்பிச்சிடும், இளவட்டங்க தனியா ஒரு டிராக் போட்டு வண்டி ஓட்டிகிட்டு இருக்கும்.  பெரிசுங்க எல்லாம் கதைய காதுல கேட்டு அனிமேஷன் வீடியோவ மனசுல ஓடவிட்டு தருமரு, பீமன், துரியோதன், திரௌபதினு காட்சியா பாத்துகிட்டு இருக்கும்.

 எனக்கு ஏழாவது, எட்டாவது சி. நடராஜன்-னு (C.N வாத்தியார், இந்தப் பேரு அப்பிடியே மாறி சீனு வாத்தியார், சீனி வாத்தியார் அப்டினுலாம் மாறிடுச்சி) ஒரு ஆசிரியர் வகுப்பெடுத்தார், அவர் வகுப்புன்னாலே ஒரு கொலைநடுக்கத்தோட தான் நாங்க வகுப்புக்குப் போவோம், கோவப்பட்டாருனா அடி பின்னி எடுத்துடுவாரு.  ஆனா, அவர் வகுப்புகள்ள அவ்வளவு கத்துக்கலாம் பாடம் தாண்டி நிறைய சொல்லுவாரு.. அது திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குறளாவும் இருக்கும் வாய்ப்பாடு, பொதுஅறிவு, கணக்குப் புதிராவும் இருக்கும், விளையாட்டு, விஞ்ஞானம், நகைச்சுவையாவும் இருக்கும்.

  அவரு ஒரு தடவை பாரதம் பாடுறதப்பத்தி நகைச்சுவையா சொன்ன விஷயம்.
பாரதம் பாடும்போது விடிஞ்சுடிச்சினா உடனே என்ன சொல்லிக்கிட்டிருந்தாலும்/பாடிகிட்டிருந்தாலும் அப்படியே அந்த இடத்துல விட்டுட்டு மறுபடி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பாங்களாம்.  அப்படி ஒரு முறை பாரதம் படிக்கும்போது "பீமன் மரத்தைப் பிடுங்கினானே" அப்டினு சொல்லவேண்டிய வசனம் வந்துச்சு.  "பீமன் மரத்தைப் பி" அப்டினும்போது விடிஞ்சிடுச்சாம், உடனே பாரதம் பாடுறத நிப்பாட்டிட்டாங்க.. மறுபடி அன்னைக்கு ராத்திரி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கனுமில்லையா... அதனால எப்புடி ஆரம்பிச்சாங்க தெரியுமா..?

 "டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.." அப்புடினு ஆரம்பிச்சாங்களாம்.. இதை கேட்டதுதான் தாமதம் கிளாஸுல சேக்காளிப் பயளுக எல்லாம் அப்புடி சிரிக்கிறானுவ..

  இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு கேக்கறிங்களா?  ஓண்ணுமில்லிங்க இந்த வாரம் ஊருக்குப் போயிருந்தேன், பாரதம் படிக்கிற சத்தம் கேட்டதும் சரி சும்மா ஒரு விசிட் விட்டுட்டு வரலாமேனு போனேன்.  சத்தியமா மனசு கனமாயிடுச்சிங்க... பாரதம் படிக்கிற நாலுபேர தவிர வேற யாருமே இல்லிங்க.. ராத்திரி சாமி ஊர்வலம் இருந்ததால நாயனக்கார கோஷ்டி மட்டும் ஒரு ஓரமா உற்சவர் பல்லக்குப் பக்கத்துல ஓக்காந்திருந்ததுங்க.  இப்ப புள்ளைங்களுக்கு ஆங்கிரி பேர்ட்ஸ் தெரியுது, அனிமேஷன் நாடகம் தெரியுது ஆனா மகாபாரதம் தெரியல.. அப்பா அம்மாவும் அததான் பெருமையா நினைக்கிறாங்க.  "மெல்லத் தமிழ் இனி சாகும்"னு சொன்னாங்க, தமிழ் சாகுறதுக்கு முன்னாடியே இந்த கலையெல்லாம் அழிஞ்சிபோயிடுமோனு பயமாயிருக்கு.  இந்த நெலம பாரதம் படிக்கிறவங்களுக்கு மட்டுமில்ல தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதுர, கரகாட்டம், வில்லுப்பாட்டுனு லிஸ்ட் முடியல நீண்டுகிட்டே இருக்கு.  இந்த கலையெல்லாம் இப்ப வரைக்கும் செஞ்சிகிட்டு இருக்கவங்க வாரிசுகளும் இப்ப இந்த கலைல இல்ல (ஆதரவு இல்லாததுதான் காரணம்) இந்த கலைகளோட அழிவுக்கு ஒருவகைல நாமளும் காரணம் அப்டின்றது மறுக்க மறைக்க முடியாத கசப்பான உண்மை.  அதான் உங்ககிட்டலாம் பகிர்ந்துக்கலாம்னு தோணிச்சு, பகிர்ந்துகிட்டேன்.



Friday, July 12, 2013

விழித்திருப்பவனின் இரவு -எஸ். இராமகிருஷ்ணன் (புத்தகப் பார்வை)


எஸ். ராமகிருஷ்ணன்
விக்கிப்பீடியாவில் எஸ். ராமகிருஷ்ணன்
(நன்றி; புகைப்படம் விக்கிப்பீடியாவிலிருந்து)
 
  எஸ். இராமகிருஷ்ணன் தமிழ் எழுத்தாளுமைகளில் மிக முக்கியமானவர்.  எழுத்தாளர் என்பதைத்தாண்டி அவர் ஒரு தேசாந்திரி (நாடோடி), விமர்சகர், நல்ல படிப்பாளர் இன்னும் எவ்வளவோ... அவர் தான் எழுதும் அளவிற்கு, அதைவிட அதிகமாகப் படிப்பவர் ஆங்கிலத்தில் Voracious Reader என்பார்களே, அப்படிப்பட்டவர்.  எழுத்து, பயணம், படிப்பு ஆகியனதான் அவர், அதுதான் எஸ். ராமகிருஷ்ணன்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பயணிப்பதில்லை, ரசிப்பதில்லை, எழுத்தைத்தாண்டி வேறெந்த கலைத்துறைகளிலும்(சினிமாவில் தொடங்கி பல துறைகள்) ஈடுபடுவதில்லை என்கிற ஆதங்கம் எஸ். இராமகிருஷ்ணனுக்கு உண்டு.  பலமுறை தன் எழுத்திலும், பேச்சிலும் அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார், வெளிப்படுத்திவருகிறார்.


 தான் படித்த உலகின் முக்கிய எழுத்தாளுமைகளையும், அவர்களின் எழுத்துகளையும் மற்றவர்களும் படித்தின்புற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர் எழுதி உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளுமைகளின் அறிமுகமே இப்புத்தகம்.  190 பக்கத்தில் 28 எழுத்தாளர்களையும், அவர்களின் ஆளுமையையும், சிறந்த எழுத்துப் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  சுருக்கமான ஆனால் முழுமையான அறிமுகம், எழுத்தாளர்களின் வாழ்க்கையும், அவர்கள் எழுத்தில் புகுத்திய புதுமைகளையும், மாற்றங்கள், அவர்களின் தனித்தன்மை, புதிய நடை என பலவற்றையும் அறிமுகப்படுத்துகிறார்.  கூடவே அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளையும் அதன் அறிமுகத்தையும் சிறந்த மேற்கோள்களையும் காட்டுகிறார்.

 விளாதிமிர் நபகோவில் ஆரம்பித்து, ஓரான் பாமுக் வரை நோபல் பரிசிலிருந்து புக்கர் பரிசுவரை பல பரிசுகளை வென்ற சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம், நமக்கும் அவர்கள் எல்லோரையும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தருகிறது(ஆனால், எஸ். இராமகிருஷ்ணனின் அறிமுகமே நமக்குப் படித்த திருப்தியைத் தரக்கூடும்).

 புயண்டஸ், போர்ஹே, ரிச்சர்ட் பர்ட்டன் போன்றோர் எழுத்தைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டதையும், நாடு அவர்களுக்கு செய்த கௌரவத்தையும், மதிப்பையும் அறியும்போது, நம் நாட்டில் எழுத்தாளர்களின் நிலையும், நாடு அவர்களை நடத்தும் விதத்தையும் எஸ். ரா குமுறலோடு கூறுவது உரைக்கிறது.

 பாப்லோ நெருடாவின் எழுத்துக்கு நாட்டுத் தலைவர்களே அஞ்சியதை அறிகையிலே வாள்முனையைவிட பேனாமுனையின் கூர்மை விளங்குகிறது.  திரைத்துறையில் கோலோச்சிய எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்மகள் (இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்னும் முகப்பெரிய முன்னேற்றம் இல்லை, ஜெயமோகன், எஸ். ரா போன்று சிலர் வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் செய்கிறார்கள்.  இதைவிடக் கொடுமை எழுத்தாளர்களின் கதையைத் தழுவியோ அல்லது முழுமையாகவோ காப்பிசெய்து எடுக்கும் எந்த இயக்குனரும் அதற்கான நன்றியை குறிப்பிடுவதோ credit-ஐ தருவதோ கிடையாது.  அவலம், கேவலத்திலும் கேவலம் நான் அவர் கதையைப் பயன்படுத்தவே இல்லை என்று சாமி மேல் சத்தியம் செய்து மறுப்பது).

  மனச்சிக்கலுக்கு ஆளான எழுத்தாளர்களைப் பற்றியும் அது தற்கொலை வரை போனதையும் அறியும்போது கனக்கிறது மனது.  தங்களுக்கு மனச்சிக்கல் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட அவர்களின் நேர்மை மெச்சவேண்டியது.  சாமுராயாக வாழ்ந்த புகியோ மிஷிமா, காமத்தையும் இலக்கியத்தையும் கொண்டாடிய சர் ரிச்சர்ட் பர்ட்டன், பெண் எழுத்தாளர்களென நீள்கிறது பட்டியல்.

 குழந்தை இலக்கியங்களான ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventures in wonderland) எழுதிய லூயி கரோல், நார்னியா(Narnia) எழுதிய சி.எஸ். லூயிஸ், ஹாபிட்(Hobbit), தி லார்ட் ஆஃப்த ரிங்ஸ்(The Lord of the Rings) எழுதிய ஜே. ஆர். டோல்கின் என அறிமுகம் நீண்டு கொண்டே போகிறது.  இப்புத்தகங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியோர்களின் அறிவுத்தேடல், மெய்த்தேடலுக்கும் கூட இப்புத்தகங்களைப் படிக்கலாம் என்கிறார் எஸ். ரா.

  உலக எழுத்தாளர்களின், எழுத்தின் அறிமுகம் வேண்டுவோர், செவ்விலக்கியத்தில் எதைப்படிப்பது என தேடுவோர் படிக்கவேண்டிய புத்தகம்.

Friday, July 5, 2013

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை 30-06-2013 லிருந்து 06-07-2013 வரை


எல்ஜி நிறுவனம் சாம்சங் நோட் II-க்குப் போட்டியாக ஆப்டிமஸ் G புரோ என்கிற நுண்ணறிபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 43,000 ஆக இருக்கும்.

நாம் அனைவரும் பயன்படுத்தும் கணினி சுட்டெலியைக் கண்டுபிடித்த டக்ளஸ் ஏங்கல்பர்ட்(Douglas Engelbart) சிறுநீரக செயலிழப்பால் மரணமடைந்தார்.

சாம்சங் கேலக்ஸி நோட் III செப்டம்பரில் வெளியிடப்படும் என தொழில்நுட்பம் குறித்து எழுதும் வலைப்பூக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

யாஹூ நிறுவனம் கைப்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான க்யூவிக்கியை(Qwiki) கையகப்படுத்தியுள்ளது.


நுண்ணறிபேசிகள் மற்றும் குளிகைக் கணினிகளில் சக்கைப்போடு போட்ட விளையாட்டான ஆங்கிரிபேர்ட்ஸ் புதிய மேம்பாடுகளுடனும், புதிய விளையாட்டு விதங்களுடனும்(mode), 15 புதிய படிநிலைகளுடனும் வந்துள்ளது.

இணையதளம்/வலைப்பூக்கள், RSS feed-ஐ படிக்கப் பலராலும் பயன்படுத்தப்பட்ட கூகுள் ரீடர் என்கிற சேவையை கூகுள் நிறுவனம் ஜூலை 1-உடன் மூடிவிட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு புதிய மேம்பாடுகளை(updates) வெளியிட்டுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) எனப்படும் இணையதளப் பெயர்கள் மற்றும் முகவரிகளை நிர்வகிக்கும் நிறுவனம், புதிதாக உயர் கணினி திரள(Domain) பெயர்களை அறிமுகப்படுத்தவுள்ளது. திரளப்பெயர்கள்(Domain Names) உ-ம் .com, .org, .in, .edu போன்றவை.